முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்


முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்
x
தினத்தந்தி 27 Nov 2018 3:45 AM IST (Updated: 27 Nov 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மரணம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப்பின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பெங்களூரு,

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாபர்ஷெரீப் (வயது 85) முன்னாள் மத்திய மந்திரியான இவர் பெங்களூருவில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் பிரேசர் டவுனில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் ெதரிவித்தனர். முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள் யு.டி.காதர், ஜமீர்அகமதுகான், கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு ஜாபர்ஷெரீப்பின் உடல் குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு எடுத்து வந்து வைக்கப்பட்டது. அங்கு அகில இந்திய காஙகிரஸ் மூத்த தலைவர் குலாம்நபிஆசாத், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு நந்திதுர்கா ரோட்டில் உள்ள மயானத்தில் ஜாபர்ஷெரீப்பின் உடல் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story