தாராபுரத்தில், நிறுத்தி வைத்திருந்த 4 டிப்பர் லாரிகளில் இருந்து ரூ.6 லட்சம் டயர்கள் திருட்டு


தாராபுரத்தில், நிறுத்தி வைத்திருந்த 4 டிப்பர் லாரிகளில் இருந்து ரூ.6 லட்சம் டயர்கள் திருட்டு
x
தினத்தந்தி 27 Nov 2018 4:15 AM IST (Updated: 27 Nov 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் நிறுத்தி வைத்திருந்த 4 புதிய டிப்பர் லாரிகளில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள டயர்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள சூரியநல்லூர் குளித்தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 50). இவர் சொந்தமாக லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 புதிய டிப்பர் லாரிகளை வாங்கியுள்ளார். இந்த லாரிகளை தாராபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக கொண்டு வந்தபோது, பல்வேறு காரணங்களால் பதிவு செய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

லாரிகளை மீண்டும் சூரியநல்லூருக்கு கொண்டு சென்றால், பதிவு செய்வதற்காக திரும்பவும் தாராபுரம் கொண்டு வரவேண்டும் என்பதால், வெங்கடேஷ் தன்னுடைய 4 டிப்பர் லாரிகளையும், தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள, அவருடைய உறவினரான ரமேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான ஹாலோபிளாக் நிறுவனத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி காலை வழக்கம்போல் ரமேஷ்குமார் தனது ஹாலோபிளாக் நிறுவனத்திற்கு வந்து பார்த்த போது, அங்கே நிறுத்தி வைத்திருந்த 4 புதிய டிப்பர் லாரிகளில் இருந்த டயர்கள் டிஸ்குகளுடன் காணாமல் போய் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே லாரி உரிமையாளரான வெங்கடேசுக்கு ரமேஷ்குமார் தகவல் கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளார்.

அங்கு ஹாலோபிளாக் நிறுவனத்தில் நிறுத்தி இருந்த 2 டிப்பர் லாரிகளில் இருந்த 16 டயர்களும், 16 டிஸ்குகளும், மேலும் 2 லாரிகளில் இருந்த 8 டயர்களும், 8 டிஸ்குகளும், ஒரு சைலன்சரையும் காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் டிப்பர் லாரிகளில் இருந்த டயர்களை திருடி சென்று இருக்கிறார்கள். திருட்டுப்போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

இது குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் வெங்கடேஷ் புகார் அளித் தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டயர்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

புதிய டிப்பர் லாரிகளில் இருந்து டயர்கள் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story