மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி: அரசாணை நகல்களை எரித்து ஆசிரியர்கள் போராட்டம் - 300 பேர் மீது வழக்கு
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசாணை நகல்களை எரித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கடந்த 1988-ம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து 2009-ம் ஆண்டு 7-வது ஊதியக்குழு, கடந்த ஆண்டு 8-வது ஊதியக்குழுவின் மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த அரசாணைகளின்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. ஒரே கல்வி தகுதி, ஒரே வேலைக்கு 3 விதமான சம்பளம் வழங்குவதாக கூறி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கடந்த சில ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசாணை நகல்களை எரித்து போராட்டம் நடத்தப்படும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று காலையில், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் திரண்டனர். அவர்கள், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஊர்வலமாக பஸ் நிலையம் செல்லும் சாலைக்கு வந்தனர்.
அப்போது, பறிக்கப்பட்ட ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் 2 அரசாணை நகல்களையும் தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக் காக நின்ற போலீசார், போராட்டக்காரர்களிடம் இருந்து அரசாணை நகலை பறித்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.
இந்த போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் மீது, திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் சில பள்ளிகள் பூட்டி கிடந்தன.
Related Tags :
Next Story