ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அரசாணை நகலை எரித்து போராட்டம்
பறிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க கோரி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அரசாணை நகலை எரித்து போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், இதற்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்த ஏழாவது ஊதிய குழுவின் எண் 234 மற்றும், எட்டாவது ஊதிய குழுவின் அரசாணை எண் 303 ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும், இந்த ஆணைகளின் மூலம் பறிக்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26–ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் கூடி நின்றனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும் இவர்கள் வந்திருந்தனர். கோரிக்கைகளை விளக்கி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட தலைவர் ரஸ்கின் ராயப்பன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜீவன் ராஜ் ஆகியோர் பேசினார்கள்.
பின்னர் அவர்கள் அரசாணை நகல்களை தீயிட்டு கொளுத்தினார்கள். அப்போது தமிழக அரசே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதே, இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்கு, இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்கு என்பது உள்பட பல கோஷங்களை எழுப்பினார்கள்.