ஏரல் அருகே பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை வழக்கில் மைத்துனருடன் மெக்கானிக் கைது திடுக்கிடும் தகவல்கள்
ஏரல் அருகே பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை வழக்கில் மைத்துனருடன் மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
ஏரல்,
ஏரல் அருகே பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை வழக்கில் மைத்துனருடன் மெக்கானிக் கைது செய்யப்பட்டார். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இரட்டைக்கொலைதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மகன் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 23–ந்தேதி இரவில் ஏரல் அருகே மேலமங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வினோத் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் தாமிரபரணி ஆற்றில், நேற்று முன்தினம் அதிகாலையில் குரும்பூர் அருகே கல்லாம்பாறையைச் சேர்ந்த துரைராஜ் மகன் ராமச்சந்திரன் (22) உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக மிதந்தார். இவரும், வினோத்தும் நண்பர்கள்.
வினோத் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து ராமச்சந்திரனும் மாயமானது தெரியவந்தது. வினோத்தும், ராமச்சந்திரனும் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து இரட்டைக்கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
2 பேர் கைதுஇந்த நிலையில் வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கொலை செய்ததாக, மேலமங்களகுறிச்சி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த துரைமுத்து என்ற ராஜா (26), அவருடைய மைத்துனர் முத்துமுருகன் (26) ஆகிய 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் சரண் அடைந்தனர்.
2 பேரையும் அவர் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான ராஜா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:–
மெக்கானிக்மெக்கானிக்கான நான் ஸ்ரீவைகுண்டத்தில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறேன். நான் என்னுடைய சமுதாயத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன். கடந்த 2013–ம் ஆண்டு வெள்ளூரைச் சேர்ந்த என்னுடைய நண்பர்களை மற்றொரு பிரிவைச் சேர்ந்த நவலடியூர் ஆறுமுகராஜா அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் உள்ளிட்ட சிலர் ஆறுமுகராஜாவின் வீட்டுக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றோம்.
இதில் உயிர் தப்பிய ஆறுமுகராஜா, எங்கள் மீது நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு ஆறுமுகராஜாவிடம் நான் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அவர் வழக்கை வாபஸ் பெறாததால், கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் உள்ளிட்ட சிலர் ஆறுமுகராஜாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தோம். இந்த வழக்கு நெல்லை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
நண்பர் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சிஇந்த நிலையில் எனக்கு உதவி செய்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த வினோத் மற்றும் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடி (30) ஆகிய 2 பேரிடமும் நட்பாக பழகினேன். நண்பர்களான அவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தனுஷ்கோடி ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்தபோது, அவருடைய மனைவியிடம் வினோத் தவறாக நடக்க முயன்றார். இதனை அறிந்த தனுஷ்கோடி சிறையில் இருந்து வெளியே வந்ததும், என்னிடம் வினோத்தை தீர்த்து கட்ட வேண்டும் என்று கூறினார்.
ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ஆறுமுகராஜாவும், வினோத்தும் உறவினர்கள். ஆறுமுகராஜா கொலை செய்யப்பட்ட பின்னர், சில நாட்கள் வினோத் என்னிடம் பேசவில்லை. பின்னர் நாளடைவில் வினோத் என்னிடம் பழகி வந்தார். எனினும் ஆறுமுகராஜா கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக, வினோத் தக்க தருணத்தை காத்து இருப்பார் என்று எச்சரிக்கையுடன் பழகி வந்தேன். இந்த நிலையில் வினோத்தை தீர்த்து கட்ட வேண்டும் என்று தனுஷ்கோடி கூறியதால், அதனை உடனே நிறைவேற்ற முடிவு செய்தேன்.
சமாதானத்துக்கு அழைத்து...இதுகுறித்து என்னுடைய அண்ணன் கண்ணன், மைத்துனரான முத்துமுருகன் ஆகியோரிடமும் தெரிவித்தேன். அவர்களும் வினோத்தை கொலை செய்ய உதவுவதாக கூறினர். அதன்படி கடந்த 23–ந்தேதி மதியம் நான் வினோத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, நாம் வழக்கமாக சந்திக்கும் மேலமங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரை மயானத்துக்கு வருமாறு கூறினேன். அதன்படி அங்கு வினோத் தன்னுடைய நண்பரான ராமச்சந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு நான் தனுஷ்கோடி, கண்ணன், முத்துமுருகன் ஆகியோர் தயாராக இருந்தோம்.
பின்னர் நான் வினோத்திடம், நீ தனுஷ்கோடியுடன் சமாதானமாக செல்ல வேண்டும். அதுதொடர்பாக உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி, அவரை ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றேன். அப்போது முத்துமுருகனும் எங்களுடன் வந்தார். ஆற்றங்கரைக்கு செல்லும் வழியில் வினோத்தை நானும், முத்துமுருகனும் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தோம்.
சென்னைக்கு தப்பினோம்பின்னர் ராமச்சந்திரனை உயிரோடு விட்டால் போலீசில் நம்மை காட்டி கொடுத்து விடுவார் என்பதால், அவரையும் கொலை செய்ய முடிவு செய்தோம். ராமச்சந்திரன் ஆற்றங்கரையில் உள்ள சுடலை கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்போனை பார்த்து கொண்டிருந்தார். அப்போது நானும், முத்துமுருகனும் அங்கு பின்புறமாக சென்று, ராமச்சந்திரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசினோம். கொலைக்கு பயன்படுத்திய 2 அரிவாள்களையும் அங்குள்ள புதர் செடிக்குள் மறைத்து வைத்து விட்டு சென்னைக்கு தப்பிச்சென்றோம்.
இதற்கிடையே வினோத், ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை அறித்த போலீசார் எங்களை தீவிரமாக தேடினர். எங்கள் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனால் நாங்கள் ஸ்ரீவைகுண்டம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தோம்.
இவ்வாறு ராஜா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்புகைதான ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இரட்டைக்கொலைக்கு பயன்படுத்திய 2 அரிவாள்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும், தலைமறைவான தனுஷ்கோடி, கண்ணன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.