திருச்செங்கோடு அருகே: முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் கைது
திருச்செங்கோடு அருகே முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு அருகே உள்ள உஞ்சனை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 44). கூலித்தொழிலாளி.
இவர் மொபட்டில் குமரமங்கலம் பிரிவுரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து வழிமறித்து கந்தசாமியிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தசாமி அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்து திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கந்தசாமியிடம் வழிப்பறி செய்ய முயன்றவர்கள் இந்த கும்பல் தான் என தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி முத்துக்குமார் என்ற இலியாஸ் (36), எலச்சிபாளையத்தைச் சேர்ந்த பைனான்ஸ் ஊழியர் தினேஷ் (26), மொளசியைச் சேர்ந்த பெயிண்டர் அருண் குமார் (22), ராமாபுரம் விக்னேஷ் (23), கொல்லப்பாளையம் தனபால் (33), சங்கர் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
தப்பி ஓடிய ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த சபரி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விசாரணையில், இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கடந்த 20-ந்தேதி சிறுமொளசியைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story