அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்தமாணவர்களுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி - கலெக்டர் மு.விஜயலட்சுமி வழங்கினார்


அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்தமாணவர்களுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி - கலெக்டர் மு.விஜயலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 28 Nov 2018 5:00 AM IST (Updated: 28 Nov 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ- மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதியை அரியலூர் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி வழங்கினார்.

அரியலூர்,

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் ‘தினத்தந்தி’ சார்பில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ -மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வந்தது. மேலும் மாணவர் பரிசு திட்டத்தின் படி மாவட்டம் தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் ‘தினத்தந்தி’யின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

2014-2015-ம் கல்வி ஆண்டில் இருந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேற்படிப்பினை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி’ கல்வி நிதி திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு தலா 10 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 34 மாவட்டங்களை சேர்ந்த 340 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

4-வது ஆண்டாக 2017-2018 -ம் கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ- மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’ கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் ‘தினத்தந்தி’ கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 20 மாணவ -மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

அரியலூர் மாவட்டம்

1) ஆர்.அபிநயா, அரசு மேல்நிலைப்பள்ளி, உட்கோட்டை.

2) எஸ். ஜெயப்பிரியா, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூர்.

3) இ.கவிமுகில், அரசு மேல்நிலைப்பள்ளி, பரணம்.

4) சி.கார்த்திகாயினி, அரசு மேல்நிலைப்பள்ளி, உதயநத்தம்.

5) எஸ்.நிவேதா, அரசு மேல்நிலைப்பள்ளி, உட்கோட்டை.

6) ஆர்.ரம்யா, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூர்.

7) ஜே.அரவிந்தன், அரசு மேல்நிலைப்பள்ளி, சோளங்குடிகாடு.

8) கே.கீர்த்தனா, பாத்திமா மெட்ரிக் பள்ளி, ஜெயங்கொண்டம்.

9) எம்.மாதவன், ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர்.

10) கே.குணால், வெற்றி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, இ.வெள்ளனூர்.

பெரம்பலூர் மாவட்டம்

11) கே.பிருந்தா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னம்.

12) ஆர்.பூமிகா, அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பெரம்பலூர்.

13) டி.காயத்ரி, அரசு மேல்நிலைப்பள்ளி, வயலபாடி.

14) ஏ.இந்துஷா, அரசு மேல்நிலைப்பள்ளி, ஓகளூர்.

15) பி.நவீன்ராஜ், செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அந்தூர்.

16) ஏ.சுமையா, செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

17) எஸ்.செல்வமணி, அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை.

18) கே.கிருஷ்ணவேணி, அரசு மேல்நிலைப்பள்ளி, நக்கசேலம்.

19) எஸ்.கபிலன், சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர்.

20) ஜி.பவித்ரா, அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆடுதுறை.

இந்த 20 மாணவ -மாணவிகளுக்கும் ‘தினத்தந்தி’ கல்வி நிதி வழங்கும் விழா அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது.

விழாவுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி தலைமை தாங்கி 20 மாணவ- மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1962-ம் ஆண்டே தொடங்கப்பட்டதாக கூறினார்கள். இப்போதும் பின்தங்கிய மாவட்டம் என்ற பட்டியலில் இருக்கும் அரியலூர் சிற்றூராக அல்லது சிறிய நகரமாக தான் அப்போது இருந்திருக்கும். அந்த கால கட்டத்திலேயே பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பள்ளி தொடங்கப்பட்டு இருப்பது பெருமைக்குரியதாகும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வுகளில் இந்த பள்ளியில் படித்த அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது பாராட்டுக்குரியது. இந்த மாவட்டத்தில் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ள 10 பேரில் 5 பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என்பதை நினைத்து பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஒரே பாட திட்டம் தான். தனியார் பள்ளிகளின் கடும் போட்டியை தாண்டி அரசு பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்து இருக்கிறார்கள். இப்படி சாதனை படைப்பவர்கள் பிளஸ்-1-ல் தனியார் பள்ளிகளை தேடி சென்று விடுகிறார்கள். அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொது தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை அவ்வப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்து வருகிறார். நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த பரிசளிப்பு விழாவில் தினத்தந்தி தேர்ந்தெடுக்கும் 10 பேரும் அரசு பள்ளியில் படித்தவர்களாக இருக்கவேண்டும். அந்த அளவிற்கு மாணவ-மாணவிகள் கூடுதல் மதிப்பெண் பெறவேண்டும். பிளஸ்-2 தேர்விலும் அதிக மதிப்பெண் பெறவேண்டும்.

பரிசு பெறும் மாணவ- மாணவிகளுடன் அவர்களது பெற்றோரும் வந்து உள்ளனர். இதனை பார்க்கும் போது ‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’என்ற திருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது. ஆன்றோர் நிறைந்த சபையில் தன் மகனை நற்பண்புகள் நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய் அவனை பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள் என்பது தான் இதன் பொருள். தங்களது பிள்ளைகள் பரிசு பெற்று பாராட்டப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடையும் பெற்றோர்கள் அவர்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர நல்வழிகாட்ட வேண்டும் என கூறி வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு முன்னிலை வகித்த அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனைவர் அ.புகழேந்தி பேசும்போது, “அடித்தட்டு மக்களால் விரும்பி படிக்கப்படும் பத்திரிகை தினத்தந்தி. மாவட்ட அளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு தினத்தந்தி கல்வி நிதி வழங்குவது பாராட்டுக்குரியது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இன்று பரிசு பெற்றுள்ள 20 மாணவ -மாணவிகளில் 12 பேர் அரசு பள்ளி மாணவர்களாக உள்ளனர். அரசு சார்பில் மாணவர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் மேலோட்டமாக படித்தால் மட்டும் போதாது. ஆழ்ந்து படிக்க வேண்டும். சிறு வயதிலேயே ஏதாவது ஒரு சாதனை படைக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்க வேண்டும். கல்வியால் மட்டுமே மிகப்பெரிய சாதனையை படைக்க முடியும். கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் அடையலாம்” என்றார்.

முன்னதாக திருச்சி ‘தினத்தந்தி’ மேலாளர் எஸ்.ஆர். சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை இசபெல்லா மேரி நன்றி கூறினார். நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியைகள் ஹெலன்மேரி, பேபி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவில் அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெய அருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி எழிலரசன் மற்றும் பரிசு பெற்ற மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story