தாயம் விளையாட்டு தகராறில் வாலிபர் கொலை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு


தாயம் விளையாட்டு தகராறில் வாலிபர் கொலை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Nov 2018 10:00 PM GMT (Updated: 27 Nov 2018 9:13 PM GMT)

தாயம் விளையாட்டு தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சேலம், 


சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் சத்யபிரகாஷ் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் அருள் (42). ஆட்டோ டிரைவர். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி கன்னங்குறிச்சியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே சத்யபிரகாஷ், அருள் மற்றும் நண்பர்கள் சிலருடன் தாயம் விளையாடி கொண்டிருந்தார்.

விளையாட்டின் போது சத்யபிரகாஷ், அருள் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சத்யபிரகாஷ் அருளை அடித்துள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அருள் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மறுநாள் காளியம்மன் கோவில் அருகே சத்யபிரகாஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருள், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யபிரகாசின் மார்பில் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து சத்யபிரகாஷ் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சத்யபிரகாஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், வாலிபரை கொலை செய்த ஆட்டோ டிரைவர் அருளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Next Story