நர்சை கர்ப்பமாக்கி கொன்ற காதலன் கைது: வேனில் காதல் பாட்டுகளை இசைத்து இளம்பெண்களை மயக்கினார்
நர்சு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காதலன், வேனில் காதல் பாட்டுகளை இசைத்து இளம்பெண்களை மயக்கி ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது.
களியக்காவிளை,
குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளையை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). இவர் நித்திரவிளையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 21–ந் தேதி காலையில் ஸ்ரீஜா குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பிணமாக மிதந்தார். களியக்காவிளை போலீசார் ஸ்ரீஜா உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்ரீஜாவை, எஸ்.டி. மங்காடு, கோழிபொற்றைவிளையை சேர்ந்த விபின் (26), காதலித்து கர்ப்பமாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து விபினை போலீசார் கைது செய்தனர்.
விபின் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ஸ்ரீஜாவை காதலித்து கர்ப்பமாக்கியதாகவும், அவர் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் கூறினார். இதையடுத்து அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காதலன் விபின் குறித்து மேலும் பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. இவர் நித்திரவிளை– களியக்காவிளை வழித்தடத்தில் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். காலை, மாலை நேரங்களில் இவரது வேனில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களும் இவரது வேனில் பயணம் செய்வது வழக்கம்.
இவ்வாறு மாணவிகள், இளம்பெண்கள் பயணம் செய்யும்போது வேனில் காதல் பாட்டுகளை இசைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இளம்பெண்களுக்கு உதவி செய்வது போல், அவர்கள் விரும்பும் இடத்தில் வேனை நிறுத்தி இறக்கி விடுவார். மேலும், சிரித்து சிரித்து பேசி மயக்குவதில் வல்லவராக வலம்வந்தார்.
இதனால், விபினுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களை விபின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.