‘கஜா’ புயலால் 1000 ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி அடியோடு பாதிப்பு விவசாயிகள் கவலை


‘கஜா’ புயலால் 1000 ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி அடியோடு பாதிப்பு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 28 Nov 2018 4:03 AM IST (Updated: 28 Nov 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் 1000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோளம் பயிர்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இது தவிர கரும்பு, வாழை, வெற்றிலை, மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், உளுந்து, எள் போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1000 ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தஞ்சை தாலுகாவில் குருங்குளம், வல்லம், நாயக்கர்பட்டி, நாகப்பஉடையான்பட்டி, சுந்தரம்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது.

1 ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவு ஆகும். நெற்பயிர்களுக்கு தேவைப்படும் தண்ணீரில் இருந்து 5-ல் 1 பங்கு மட்டும் தண்ணீர் தேவை. இதனால் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளத்தை பயிரிடுகின்றனர். இந்த பயிர்கள் 90 முதல் 110 நாட்கள் வயது கொண்டது.

இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். 1 கிலோ மக்காச்சோளம் ரூ.13 வரை விற்பனை செய்யப்படுகிறது. மக்காச்சோளம் கோழி தீவனத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதால், சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.

இந்த பருவத்தில் தஞ்சை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் அனைத்தும் 60 முதல் 80 நாட்கள் ஆன பயிராக இருந்தது. இது பூத்து சோளம் உருவாகக்கூடிய கால கட்டம் ஆகும். சில இடங்களில் மக்காச்சோள கதிர்கள் விளைந்தும் காணப்பட்டது.

இந்த நிலையில் ‘கஜா’ புயல் காரணமாக கடந்த 16-ந் தேதி பலத்த சூறாவளிக்காற்று வீசியதுடன் மழையும் கொட்டியது. இதனால் மக்காச்சோளம் சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. விளைந்த நிலையில் இருந்த மக்காச்சோள கதிர்கள் அனைத்தும் தரையோடு சாய்ந்து கிடக்கின்றன. புயலை தொடர்ந்து மழை நீடித்ததால் மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் முளைத்து விட்டன. பல இடங்களில் மக்காச்சோள பயிரில் பூக்கள் உதிர்ந்து பாதிக்கப்பட்டுவிட்டன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சை வட்டார பகுதிகளில் மட்டும் 700 ஏக்கர் வரையிலும், மற்ற பகுதிகளில் 300 ஏக்கர் என 1000 ஏக்கர் வரை மக்காச்சோள பயிர்கள் அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

தஞ்சாவூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கிரமங்களிலும் கிராமம் வாரியாக மக்காச்சோளம், தென்னை, கரும்பு, நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சேதம் அடைந்தது குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வேலூர், பெரம்பலூர், கரூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 வேளாண்மைத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story