பயிர் காப்பீடு செய்ய அதிகாரி வராததை கண்டித்து வாய்மேட்டில், விவசாயிகள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


பயிர் காப்பீடு செய்ய அதிகாரி வராததை கண்டித்து வாய்மேட்டில், விவசாயிகள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2018 11:11 PM GMT (Updated: 27 Nov 2018 11:11 PM GMT)

பயிர் காப்பீடு செய்ய அதிகாரி வராததை கண்டித்து வாய்மேட்டில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாய்மேடு,

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வருகிற 30-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பயிர் காப்பீடு செய்ய வாய்மேடு வேளாண்மை விரிவாக்க அலுவலகத்திற்கு விவசாயிகள் வந்தனர். அப்போது வேளாண்மை துறை அதிகாரிகள் வராததால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதையும், பயிர் காப்பீடு செய்ய வேளாண்மை அதிகாரி வராததையும் கண்டித்து வாய்மேட்டில் விவசாயிகள் சாலையின் குறுக்கே மரத்தை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாண்மைத்துறை உதவி அலுவலர் ராமநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நிவாரண பொருட்கள் ஏற்றி சென்ற வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Next Story