நேர்மையான அதிகாரிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நேர்மையான அதிகாரிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
காரைக்குடி,
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை பகுதி மக்களை சந்திக்க சென்றார். வழியில் அவர் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தேர்தலை சந்திக்க பயப்படுகின்றன. இடைத்தேர்தல் என்றாலே பணப்பட்டுவாடா என்ற நிலைமைக்கு தேர்தல் களம் வந்து விட்டது. போலீசார் பணியில் ஈடுபடும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தேவைப்பட்டால் மற்ற துறைகளிலும் அதனை அமல்படுத்தலாம். கல்வி நிறுவனங்களிலும் செல்போன் பயன்படுத்த விதிமுறைகளை அமல்படுத்தலாம். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு தே.மு.தி.க. எப்போதும் துணையாக நிற்கும். அரசு நேர்மையான அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டும்.
தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் முடிவு செய்வார். தேர்தல் கூட்டணி சம்பந்தமாக வைகோவின் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல வேண்டியது நான் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.