நாகை-திருவாரூர் மாவட்டங்களில், புயல் சேத பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்


நாகை-திருவாரூர் மாவட்டங்களில், புயல் சேத பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்
x
தினத்தந்தி 27 Nov 2018 11:18 PM GMT (Updated: 27 Nov 2018 11:18 PM GMT)

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளையும் வழங்குகிறார்.

நாகப்பட்டினம்,

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளையும் வழங்குகிறார்.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கஜா புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் இந்த மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் பெரும்பாலான கிராமங்கள் மின்சாரம் வினியோகம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் நிவாரண பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளை கண்காணித்து பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ந் தேதி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு வந்தார். புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சேத பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர், நாகை மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டு வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டர், திருவாரூரில் தரை இறங்க முயன்ற நேரத்தில் மழை பெய்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து திருவாரூர், நாகை மாவட்டங்களில் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு பாதியிலேயே திருச்சிக்கு திரும்பி சென்றார்.

இதனையடுத்து ரத்து செய்யப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று(புதன்கிழமை) புயல் சேத பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

இதற்காக நேற்று இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து சென்னை-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு அதிகாலை 5 மணி அளவில் நாகை ரெயில் நிலையத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து ஓய்வெடுப்பதற்காக அரசினர் சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார்.

காலை 8 மணி அளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம், பெரியகுத்தகை, வேதாரண்யம் மற்றும் வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். அப்போது பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், நிவாரண உதவிகளையும் வழங்குகிறார். அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.

மதியம் 2 மணி அளவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேலமருதூரில் தொடங்கி தென்பாதி, கட்டிமேடு, திருத்துறைப்பூண்டி, மணலி, திருநெய்த்தேர், மாங்குடி ஆகிய இடங்களில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறுவதுடன், நிவாரண உதவிகளையும் வழங்குகிறார். பின்னர் திருவாரூர் கல்பாலம் அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்ட பின்னர் இரவு 10.30 மணிக்கு திருவாரூரில் இருந்து ரெயில் மூலம் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

தமிழக முதல்-அமைச்சர் நாகை வருகையையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், 600 உள்ளூர் போலீசார், சிறப்பு போலீசார் 400 பேர், ஆயுதப்படை போலீசார் 200 உள்பட மொத்தம் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) அரவிந்த் மேனன் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நாகை, திருவாரூரில் இன்று ஆய்வு: ‘ரெயிலில் தனிப்பெட்டி வேண்டாம்’ என்ற முதல்-அமைச்சர் பொதுவாகவே முதல்-அமைச்சர், கவர்னர் போன்ற முக்கிய பிரமுகர்கள் ரெயில் பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுக்காக ‘சலூன்’ எனப்படும் தனி பெட்டிகள் ஒதுக்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில் நாகை, திருவாரூரில் இன்று ஆய்வு செல்வதற்காக ரெயில் பயணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தபோது, ‘தனிப்பெட்டி ஒதுக்கட்டுமா?’, என்று அவரின் செயலாளர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். ‘மற்ற பயணிகள் செல்லும் முதல் வகுப்பு பெட்டியிலேயே பயணம் செய்துகொள்கிறேன்’, என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

Next Story