சுரண்டையில் சம்பளம் கேட்டு பீடித்தொழிலாளர்கள் போராட்டம் வளாகத்தில் உணவு சமைத்து சாப்பிட்டனர்
சுரண்டையில் சம்பளம் கேட்டு பீடித்தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் வளாகத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.
சுரண்டை,
சுரண்டையில் சம்பளம் கேட்டு பீடித்தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் வளாகத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.
சம்பளம் வழங்கப்படவில்லைநெல்லை மாவட்டம் சுரண்டையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்களின் பிரதான தொழில் பீடி சுற்றும் தொழில் ஆகும். அவர்கள் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள தனியார் நிறுவன பீடி நிறுவனத்திற்கு பீடி சுற்றி கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு வாரம் ஒருமுறை சம்பளம் அவர்களின் கைகளில் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் கேஷ்லெஸ் எகானாமி அடிப்படையில் அவர்களின் சம்பளங்கள் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மாதம் ஒருமுறை சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகை வந்த நிலையில் அந்த மாதத்திற்கான சம்பளம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில் நிர்வாகத்திடம் கேட்டபோது இவர்களுக்கான சம்பளம் ஆலங்குளம் கிளை பகுதியை சேர்ந்த தொழிலாளர்களின் வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து சம்பளத்தை திரும்ப பெற்று இவர்களுக்கு செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உணவு சமைத்து போராட்டம்இதற்கிடையே கடந்த 14–ந் தேதி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை போலீசாரும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒரு வாரத்திற்குள் சம்பளம் திரும்ப பெற்று வழங்கப்படும் என்று நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். ஆனால் சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
எனவே இதுவரை உள்ள சம்பளத்தை பாக்கி இல்லாமல் வழங்க வேண்டும், வாரம் ஒருமுறை சம்பளம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. பீடித்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஆரியமுல்லை, சுரண்டை நிர்வாகிகள் பொட்டு செல்வம், பொற்செல்வி, லலிதாதேவி, முத்துலட்சுமி உள்பட 200–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு, சிவகுருநாதபுரம் பீடி நிறுவன வளாகத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்புஇதுகுறித்து தகவலறிந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் மற்றும் நிர்வாகம் தரப்பில் சிவகுருநாதபுரம் கிளை மேலாளர் ஜெயந்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வருகிற 3–ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) 2 மாத சம்பளத்தை பாக்கி இல்லாமல் செலுத்துவதாக நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.