சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பரிதாப சாவு நாட்டறம்பள்ளி அருகே விபத்து


சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பரிதாப சாவு நாட்டறம்பள்ளி அருகே விபத்து
x
தினத்தந்தி 29 Nov 2018 4:00 AM IST (Updated: 28 Nov 2018 6:47 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

நாட்டறம்பள்ளி,

காட்பாடியை அடுத்த சேத்துவண்டை பகுதியில் உள்ள சென்றாயன்பள்ளியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 24). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பரான காட்பாடியை சேர்ந்த ராகேஷ் (24) சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் ராஜ்குமாரை பார்ப்பதற்காக ராகேஷ் பெங்களூரு சென்றிருந்தார். பின்னர் இரவு அவர்கள் மோட்டார்சைக்கிளில் வேலூருக்கு புறப்பட்டனர்.

ஓசூர், கிருஷ்ணகிரியை கடந்து அவர்கள் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வேலூர் மாவட்ட எல்லைப்பகுதியான நாட்டறம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. வேகமாக மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் அந்த லாரி சென்று கொண்டிருப்பதாக கருதி அந்த இடத்தை வேகமாக கடக்க முயன்றனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அதே லாரியின் பின்பகுதியில் இவர்களது மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் அந்த இடத்திலேயே இறந்தனர். அதிகாலை நேரம் என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அவர்களது உடல்கள் சாலையிலேயே கிடந்தன.

அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதனைப்பார்த்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து சாலையில் பிணமாக கிடந்த ராஜ்குமார் மற்றும் ராகேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story