ஊட்டியில்: அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது - நோயாளிகள் பீதி
ஊட்டியில் அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் நோயாளிகள் பீதி அடைந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் தலைமையிடமான ஊட்டியில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கடந்த 6 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.5½ கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதோடு, முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.2 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை, நரம்பியல், நீரிழிவு நோய், சித்தா, ஹோமியோபதி போன்ற பிரிவுகளுக்கு தனித்தனியாக டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதியதாக வார்டுகள் கட்டும் பணி பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் புறநோயாளிகள் பிரிவுக்கு செல்லும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து சாலையோரத்தில் கீழே விழுந்தது.
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் அவை சேதம் அடைந்தன. மேலும் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 2 மரங்கள் சாய்ந்தது. சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் பொதுமக்களோ அல்லது வாகனங்களோ செல்லாததால் பெரும் விபத்து ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பீதி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் இணை இயக்குனர் அலுவலகத்துக்கு முன்பு கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த நிலையில் காணப்பட்டது. அப்போது வளாகத்தில் இருந்த ஒரு சிமெண்டு தொட்டியில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஊட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் மருத்துவத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்டாமல் அலட்சியமாக இருந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில், மீண்டும் பாதுகாப்பாக சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. அதற்கு பதிலாக தடுப்பு வேலிகள் மட்டுமே அமைக்கப்பட்டது. தற்போது அதன் அருகில் உள்ள சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது நோயாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைய வரும் நோயாளிகளை சுற்றுச்சுவர் பெரும் விபத்தில் சிக்க வைக்கும் நிலையில் உள்ளது. மேலும் சுவரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஆஸ்பத்திரியில் மீண்டும் புதிதாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story