மரங்களை வெட்டி, பசுமாட்டை கொன்ற வழக்கில் 19 பேருக்கு 1 ஆண்டு ஜெயில் ஆரணி கோர்ட்டு தீர்ப்பு


மரங்களை வெட்டி, பசுமாட்டை கொன்ற வழக்கில் 19 பேருக்கு 1 ஆண்டு ஜெயில் ஆரணி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 4:30 AM IST (Updated: 29 Nov 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே பட்டா நிலத்தில் நின்ற மரங்களை வெட்டியதில் ஏற்பட்ட தகராறில் பசுமாட்டை கொன்றனர். இந்த வழக்கில் 19 பேருக்கு ஆரணி கோர்ட்டில் தலா 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த ராயங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன். அங்குள்ள மயானப்பாதையை அகலப்படுத்துவதாக கூறி சிலர், அர்ச்சுணன் பட்டா நிலத்தில் நின்ற மரங்களை வெட்டினர். அதனை அர்ச்சுணன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அர்ச்சுணனை தாக்கினர். மேலும் அவருடைய பசு மாட்டை வெட்டி கொன்று, பயிர்களையும் சேதப்படுத்தினர்.

இதுகுறித்து அர்ச்சுணன் கொடுத்த புகாரின்பேரில் சுரேஷ், ஜெயபால், விநாயகம், சங்கர், சரவணன், எ.ஏழுமலை, அண்ணாமலை, ஜோதி, ஈஸ்வரன், பி.சங்கர், மண்ணு, துரை, சின்னப்பா என்கிற சிப்பாய், கணேசன், சின்னசாமி, சுப்பிரமணி, பாலாஜி, முருகன், வாத்துக்காரன் மகன் சங்கர், குப்பத்தான், ஏழுமலை ஆகிய 21 பேர்மீது 14.12.2005 அன்று களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஆரணி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடைபெற்றுவந்தநிலையில் அர்ச்சுணன் இறந்துவிட்டார். மேலும் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட எ.ஏழுமலை, சின்னப்பா என்கிற சிப்பாய் ஆகிய இருவரும் இறந்துவிட்டனர்.

இந்த வழக்குவிசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ்.தேவநாதன் தனது தீர்ப்பில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ், ஜெயபால், விநாயகம், சங்கர், சரவணன், அண்ணாமலை, ஜோதி, ஈஸ்வரன், பி.சங்கர், மண்ணு, துரை, கணேசன், சின்னசாமி, சுப்பிரமணி, பாலாஜி, முருகன், வாத்துக்காரன் மகன் சங்கர், குப்பத்தான், ஏழுமலை ஆகிய 19 பேருக்கும் தலா 1 ஆண்டு தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

ஆரணி கோர்ட்டில் 19 பேருக்கு ஒரே நேரத்தில் சிறை தண்டனை விதித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story