புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 27 வகையான நிவாரண பொருட்கள் முதல்-அமைச்சர் வழங்கினார்


புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 27 வகையான நிவாரண பொருட்கள் முதல்-அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:30 AM IST (Updated: 29 Nov 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 27 வகையான நிவாரண பொருட்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நாகப்பட்டினம்,

கஜா புயலால் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அரிசி, வேட்டி, சேலை, பாத்திரங்கள் உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் இடம்பெற்று இருந்தன.

இந்த நிகழ்ச்சியின்போது கஜா புயலினால் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.30 லட்சமும், குடிசை வீடுகள் சேதம் அடைந்த 354 பேருக்கு ரூ.57 லட்சத்து 60 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டது. மீட்பு பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மேலும் இறந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 15 பேருக்கு ரூ.2 லட்சத்து 49 ஆயிரம், மா, முந்திரி போன்ற மரங்கள் சேதம் அடைந்த விவசாயிகள் 10 பேருக்கு ரூ.55 ஆயிரத்து 890, தென்னை மரங்கள் சேதம் அடைந்தற்காக 20 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 47,650, கண்ணாடி நாரிழை படகுகளுக்கு நிவாரணமாக மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரம் என மொத்தம் 443 பேருக்கு ரூ.96 லட்சத்து 60 ஆயிரத்து 540 நிவாரண தொகை வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, உதயகுமார், அன்பழகன், சரோஜா, பெஞ்சமின், எம்.பி.க்கள் கோபால், பாரதிமோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சுரேஷ்குமார். மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story