காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட எதிர்ப்பு: காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்


காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட எதிர்ப்பு: காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:15 AM IST (Updated: 29 Nov 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி ஆற்றின் குறுக்கே சிவசமுத்திரம் அருவியின் அருகே மேகதாது எனும் இடத்தில் இரு தடுப்பணைகள் கட்டி, நீர் மின்நிலையம் அமைக்க, கர்நாடக அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தையும் அடுத்த மாதம் டிசம்பரில் நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்திட்டத்தை நிறைவேற்றினால் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆறு கானல் நீராகிவிடும், இதனால் மக்களின் குடிநீர் தேவையும், தமிழகத்தில் 24½ லட்சம் ஏக்கர் விவசாயம் பாதித்து விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என தமிழக அரசும், பல்வேறு அமைப்புகளும் மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி செயல்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை ரெயிலடி முன்பு நேற்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி இயக்க பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டமான மேகதாதுவில் அணை கட்டும் அனுமதியை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், காவிரி உரிமை மீட்புக்குழு பொருளாளர் மணிமொழியன், தாழாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Next Story