கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்: 2-ம்போக நெல் சாகுபடி பணி தீவிரம்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்: 2-ம்போக நெல் சாகுபடி பணி தீவிரம்
x
தினத்தந்தி 29 Nov 2018 3:30 AM IST (Updated: 29 Nov 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம்போக நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தமபாளையம், 

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் ஒரு போக நெல் சாகுபடி மட்டும் நடந்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தொடர்ந்து மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடு,கிடுவென உயர்ந்தது. இதையடுத்து முதல் போக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நெற்பயிர் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடை பணிகள் முடிவடைந்தது.

தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம்போக நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிபட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் வளர்க்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், சின்னமனூர், கோட்டூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றங்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உத்தமபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ராமராஜிடம் கேட்டபோது, வேளாண்மை அலுவலகத்தில் தேவையான அளவு விதைநெல் இருப்பு உள்ளது. விதை நெல்லுக்கு அரசு மானியமாக ஒரு கிலோவுக்கு ரூ.20 மானியம் வழங்கப்படுகிறது. விதை நெல் டி.கே.13 ரகம் மானிய விலையில் ஒரு கிலோ ரூ.16-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் விதை நெல்லை தனியார் கடைகளில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் சில நேரங்களில் விதை நெல் எதிர்பார்த்த அளவு இல்லை என்றால், கூடுதல் மகசூல் பெற முடியாது. அதே நேரத்தில் நோய் தாக்குதல் ஏற்படும். எனவே விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகங்களில் விதை நெல் வாங்கி பயன்பெற வேண்டும். மேலும் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்திற்கு விவசாயிகள் நேரில் வந்து நெல் சாகுபடிக்கு தேவையான தொழில்நுட்பம் குறித்து ஆலோசனைகள் பெறலாம் என்றார்.

Next Story