போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைதிகள் 2–வது நாளாக உண்ணாவிரதம்


போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைதிகள் 2–வது நாளாக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 29 Nov 2018 5:15 AM IST (Updated: 29 Nov 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைதிகள் நேற்று 2–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி(21). பாகூர் போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயமூர்த்தி உடல்நலக்குறைவால் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

ஜெயமூர்த்தி மர்மமான முறையில் இறந்த தகவல் காலாப்பட்டு சிறையில் இருந்த மற்ற கைதிகளுக்கு தெரியவந்தது. போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் தாக்கியதால் தான் அவர் மரணம் அடைந்தார். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சிறையில் இருந்த கைதிகள் நேற்று முன்தினம் இரவு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் 2–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் வார்டன்கள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 14 கைதிகள் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று காலை புதுவை கோர்ட்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்சில் அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் பஸ்சில் இருந்து இறங்க மறுத்தனர். அவர்கள், வழக்குகளில் போலீசார் எங்களை கைது செய்யும் போது போலீஸ் நிலையத்தில் வைத்து அடிக்கின்றனர். பின்னர் காலாப்பட்டு சிறைக்கு கொண்டு சென்ற பின்னர் அங்கு வைத்து சிறைகாவலர்கள் எங்களை அடிக்கின்றனர்.

நீதிபதி முன்னிலையில் ஆஜராகும் போது புகார் செய்யலாம் என்றால் போலீசார் எங்கள் அருகில் நிற்கின்றனர். அதையும் மீறி புகார் செய்தால் நாங்கள் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். ஜெயமூர்த்திக்கு உடனடியாக சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு பஸ்சில் இருந்து இறங்கி கோர்ட்டிற்கு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story