விருத்தாசலம்: அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு - நோயாளிகள் கடும் பாதிப்பு


விருத்தாசலம்: அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு - நோயாளிகள் கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 4:00 AM IST (Updated: 29 Nov 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். இங்குள்ள அரசு மருத்துவமனை மூலம் மாவட்டத்தில் ஒரு பகுதி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதாவது விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், சிறுபாக்கம், நெய்வேலி, மங்கலம்பேட்டை, கம்மாபுரம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளை சுற்றிலும் அமைந்துள்ள கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி இதையொட்டி செல்லும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, கடலூர்-சேலம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் நேரும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் இந்த மருத்துவமனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதி மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை, டாக்டர்கள் பற்றாக்குறை என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது.

காய்ச்சல்

இப்படி ஒருபுறம் பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் கூறியதாவது:-

பன்றிக்காய்ச்சல், டெங்கு என்று பல்வேறு வகையான காய்ச்சல்கள் மக்களை அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசும் பல்வேறு விழிப்புணர்வுகளை எடுத்து வருகிறது.

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறது. அவ்வாறு வருபவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளுடன், மருந்து மாத்திரைகள் முழுமையாக கிடைப்பதில்லை.

மாத்திரைக்கு தட்டுப்பாடு

காரணம், விருத்தாசலம் மருத்துவமனைக்கு கடந்த சில மாதங்களாக காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதோடு தற்போது பெய்த மழை மற்றும் இரவில் நிலவும் குளிர் என்கிற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே நாளுக்கு நாள் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இவர்களில் 2 முதல் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.

இதுபோன்ற நிலையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ‘பாரசிட்டாமல்’ மாத்திரைகள், மேலும் இருமல் போன்றவைக்கு தேவையான ‘டானிக்’ ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மாத்திரைகளை வாங்கி நோயாளிகளுக்கு டாக்டர்கள் வழங்கி வருகிறார்கள்.

அதில் 3 நேரத்திற்கு டாக்டர்கள் மாத்திரை எழுதி கொடுத்தால், தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஒரு நேரத்திற்கான மாத்திரைகள் தான் வழங்கப்படுகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதேபோல மாவட்டம் முழுவதும் ‘பாரசிட்டாமல்’ மாத்திரைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து விருத்தாசலம் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சாமிநாதனிடம் கேட்ட போது, தேவையான அளவுக்கு மாத்திரை, மருந்துகள் உள்ளன. நோயாளிகளுக்கும் இவை சரியாக வழங்கப்பட்டு வருகிறது. அதிகளவில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் வயிற்றுப்புண் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.

அதிகாரிகள் இவ்வாறு விளக்கம் கொடுத்த போதிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் அங்கு மருத்துவ வசதி முழுமையாக கிடைப்பதிலை என்கிற காரணத்தினால் தான் உயர் தர அரசு மருத்துவமனையை நோக்கி வருகிறார்கள்.

ஆனால் அங்கேயே மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அந்த மருத்துவமனை நிர்வாகமே ஆரம்ப சுகாதார நிலையத்திடம் மருந்துக்காக கையேந்துவது என்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த நிலையை போக்கிட அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திட முன்வரவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story