இன்று 10–ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய சிகிச்சை பிரிவுகள் தொடங்க கோரிக்கை
இன்று 10–ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவுகளை தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தர்மபுரி,
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 10–ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 10–ம் ஆண்டு தொடக்கவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி, தர்மபுரியின் பெருமைக்குரிய அடையாளமாக விளங்குகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை காரணமாக மருத்துவச்செலவு என்பது இந்த மாவட்ட மக்களுக்கு எளிதில் செய்யமுடியாத பெரிய செலவாகும்.
இந்த மாவட்ட பொதுமக்கள் மேல்சிகிச்சை பெற வேண்டுமென்றால் சேலம், பெங்களூரு போன்ற பெரிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்தநிலை மாற முக்கிய காரணம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைதான். தர்மபுரி அரசு மருத்துவமனை தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனையாக இருந்தது. அப்போது 385 படுக்கைகளுடன் 35 டாக்டர்கள், 62 செவிலியர்களுடன் செயல்பட்டது.
கடந்த 2008–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந் தேதி தர்மபுரி அரசு மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனை 816 படுக்கைகள் வசதிகொண்ட மிகப்பெரும் மருத்துவமனையாக வளர்ந்திருக்கிறது. 195 டாக்டர்கள் 262 செவிலியர்களும் இங்கே பணிபுரிகிறார்கள்.
தற்போது இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெறுகிறார்கள். ஒரு ஆண்டில் ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். ஒரு மாதத்தில் சராசரியாக 800 பிரசவங்கள் இங்கு நடைபெறுகின்றன. மாதத்திற்கு சராசரியாக 500 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
இந்த மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்குகள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி மகப்பேறு மருத்துவத்திற்கென தனி வளாகம் அமைக்கப்பட்டு, மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு என பிரத்தியேக அறுவை அரங்குகளும் இருக்கின்றன. ஒரு ஆண்டில் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புக்கு இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். வருகிற கல்வி ஆண்டில் இருந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் சிறப்பு மருத்துவ மேற்படிப்பு இடங்கள் 4–ம், கண் சிகிச்சை மேற்படிப்பு இடங்கள் 4–ம் தொடங்கப்பட இருக்கின்றன.
விரைவில் அறுவைச் சிகிச்சை, எலும்பு முறிவு மற்றும் மகப்பேறு மருத்துவ மேற்படிப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தர்மபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும், அருகிலுள்ள ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மக்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவுகளை தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தர்மபுரி முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் கூறியதாவது:–
மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைவதற்கு காரணமானவர்களை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறோம். தர்மபுரி நகரம் தேசிய நெடுஞ்சாலை எண்–7 அருகில் அமைந்திருக்கிறது. இந்த நெடுஞ்சாலை இந்தியாவிலேயே வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கிற நெடுஞ்சாலை. இங்கே அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஆனால் தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த விபத்து மற்றும் தலைக்காய சிகிச்சை பிரிவு இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் விபத்தில் சிக்கி இங்கு வருபவர்கள் தலைக்காய மேல்சிகிச்சைக்காக சேலத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.
நவீன வாழ்வில் இதயநோய்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சை பிரிவு இதுவரை தொடங்கப்படவில்லை. புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. சிறுநீரகவியல் நோய் பிரிவும் இல்லை. தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதயநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு டாக்டர்களை பணியமர்த்துவதோடு அதற்கான சிறப்பு சிகிச்சை பிரிவையும் விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும். ஒருங்கிணைந்த விபத்து மற்றும் தலைக்காய பிரிவு, புற்றுநோய் பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு ஆகியற்றையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் கூறினார்.