தனியார் மீன் அங்காடிக்கு எதிர்ப்பு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்


தனியார் மீன் அங்காடிக்கு எதிர்ப்பு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
x
தினத்தந்தி 30 Nov 2018 4:15 AM IST (Updated: 29 Nov 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

தனியார் மீன் அங்காடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள நகராட்சி அலுவலகத்தை நேற்று திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான மீனவர்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மீனவர்களான நாங்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் மீன்விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். மேலும் நாங்கள் திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஈக்காடு சாலையில் எங்களுக்கு மீன் அங்காடி அமைத்து தரவேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். ஆனால் இது நாள் வரையிலும் எங்களுக்கு மீன் அங்காடி கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர் மீன்அங்காடியை அமைக்க பணியை மேற்கொண்டார்.

இதை அறிந்த நாங்கள் அங்கு மீன் அங்காடி அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இது தொடர்பாக நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தோம். இங்கு தனியார் மீன்அங்காடி கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த மீன் அங்காடி திறக்கப்பட்ட பிறகு எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் எந்த அனுமதியும் பெறாமல் மீன் அங்காடியை நடத்தி வருகின்றனர். அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து அந்த தனியார் மீன் அங்காடியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது மீனவர்களிடம் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முருகேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story