பெருந்துறை அருகே லாரி மீது வேன் மோதல்: அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பரிதாப சாவு சிறுவர்கள் உள்பட 13 பேர் படுகாயம்
பெருந்துறை அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிறுவர்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெருந்துறை,
வேலூரில் இருந்து அய்யப்ப பக்தர்கள் 14 பேர் கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி பக்தர்கள் 14 பேரும் மாலை அணிந்து ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை வேலூரை சேர்ந்த ராஜ்கபூர் (வயது 24) என்பவர் ஓட்டினார். இந்த வேன் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஓலப்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டு இருந்த லாரியின் பின்பக்கமாக அய்யப்ப பக்தர்கள் வந்த வேன் பயங்கரமாக மோதியது. இதனால் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனுக்குள் இருந்த அய்யப்ப பக்தர்கள் அய்யோ.. அம்மா... என்று அபயக்குரல் எழுப்பினார் கள். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் வேனுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் வேலூரை சேர்ந்த பழனி (40), நாகராஜ் (46) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த டிரைவர் ராஜ்கபூர் மற்றும் கோதண்டம் (58), முரளி (34), ஜோதி (34), சக்தி (30), பாரத் (30), விமல் (28), செந்தில் (40), சிறுவர்கள் ரோகித் (7), அருண் (7), ஸ்ரீமதி (7), மோனிகா (7), நித்தின் (7) உள்பட 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் இறந்த பழனி மற்றும் நாகராஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், மேல் சிகிச்சைக்காக கோதண்டம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், செந்தில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் ராஜ்கபூர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story