திருச்சியில் பலத்த மழை: விமானம் இறங்கும் போது இறக்கை தரையில் தட்டியதாக பரபரப்பு


திருச்சியில் பலத்த மழை: விமானம் இறங்கும் போது இறக்கை தரையில் தட்டியதாக பரபரப்பு
x
தினத்தந்தி 30 Nov 2018 4:30 AM IST (Updated: 30 Nov 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பலத்த மழையால் விமானம் தரை இறங்கும் போது, இறக்கை தரையில் தட்டியதாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பட்டு,

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானத்தில் கருமேகம் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த மழை காலை 8 மணி முதல் 11.30 மணிவரை இடைவிடாது பெய்துகொண்டே இருந்தது. பலத்த மழை காரணமாக திருச்சியில் விமானம் தரை இறங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது.திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினமும் நேரடியாக விமான போக்குவரத்து சேவை உள்ளது. 24 மணி நேரமும் விமானம் இயக்கப்பட்டு வருவதால், திருச்சி விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

திருச்சி விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் காலை 9.10 மணிக்கு வரும். பின்னர் மாலை 4.10 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு மேலே வந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வானிலை சரியில்லாத காரணத்தால் விமானம் இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடியே இருந்தது.

இதனால் விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் அச்சமடைந்தனர். இந்தநிலையில் விமானத்தை சாய்வாக தரை இறக்க முயன்றபோது இறக்கையின் ஒரு பகுதி தரையில் தட்டியதாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், வானிலை சரியில்லாத காரணத்தால் மீண்டும் இலங்கை செல்ல அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் இலங்கை திரும்பி சென்ற விமானம், மழை நின்ற பின்னர் மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு பகல் 11.53 மணிக்கு வந்திறங்கியது. பின்னர் வழக்கம்போல அந்த விமானம் மாலை 4.10 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி விமானநிலைய இயக்குனர் குணசேகரன் நிருபர்களிடம் கூறுகையில், “ஸ்ரீலங்கன் விமானத்தின் இறக்கை தரை தட்டியது என்பது ஒரு தவறான தகவல். அதாவது காலை 9.24 மணிக்கு விமானம் திருச்சி ஓடுதள பாதையில் இறங்க முயன்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக தரையிறங்காமல் மீண்டும் மேலே எழும்பி இலங்கைக்கு திரும்பி சென்றது. பின்னர் காலை 11.53 மணிக்கு மீண்டும் விமானம் திருச்சி வந்து தரையிறங்கியது. நடந்த சம்பவம் குறித்து விமானநிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்காமல் திரும்பி செல்வது வழக்கம். அதுபோல தான் ஸ்ரீலங்கன் விமானம் தரையிறங்காமல் திரும்பி சென்றது. இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார். 

Next Story