தேவதானப்பட்டி அருகே: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி - வாலிபருக்கு வலைவீச்சு

தேவதானப்பட்டி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேவதானப்பட்டி,
தேவதானப்பட்டி அருகில் உள்ள அட்டணம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவர் ரூ.1 லட்சம், ரூ.5 லட்சம் என பல வகைகளில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் தேவதானப்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி, கெங்குவார்பட்டி, எழுவனம்பட்டி, வத்தலக்குண்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏலச்சீட்டுக்கு பணம் கட்டி வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளிகள் ஆவார்கள்.
இதில் அட்டணம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி உள்பட பலர் ரூ.1 லட்சத்துக்கு சீட்டு பணம் கட்டி 8-வது மாத முடிவில் பணம் வாங்க செந்தில்குமாரை தேடினர். ஆனால் அவரது வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து பணம் கட்டி ஏமாந்தவர்கள் கடந்த 3 மாதங்களாக பல ஊர்களுக்கு சென்று செந்தில்குமாரை வலைவீசி தேடிவந்தனர். ஆனால் அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
எனவே இதுகுறித்து பாதிக் கப்பட்டவர்களான அட்டணம்பட்டியை சேர்ந்த ராசு (50), ராமாயி (60), சின்னம்மாள் (55), அழகர்சாமி (48), மருதையம்மாள் (50), எழுவனம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (35), தேவதானப்பட்டியை சேர்ந்த முத்துராஜ் (40), கெங்குவார்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (60), அழகுத்தாய் (50), வத்தலக்குண்டுவை சேர்ந்த காமு (40) ஆகியோர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் மனு அளித்தனர். அதில் அவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி செந்தில்குமார் ரூ.15 லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களைப்போல் பலரும் செந்தில்குமாரிடம் ஏலச்சீட்டுக்காக பணம் கட்டி ஏமாந்துள்ளனர். இவ்வாறு சுமார் ரூ.1 கோடி வரை செந்தில்குமார் மோசடி செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story