தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 29 Nov 2018 11:00 PM GMT (Updated: 29 Nov 2018 7:07 PM GMT)

தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்சி,

கஜா புயலால் சேதம் அடைந்த தென்னை மரங்களை மறுசீரமைப்பு செய்து இழந்ததை மீட்டெடுக்கும் கருத்தரங்கம் பேராவூரணியில் நடக்கிறது. புயல் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தென்னை விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் நானும், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகிறோம். இந்த கருத்தரங்கம் தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.

புயல் பாதித்த பகுதிகளுக்கு பா.ஜ.க. சார்பில் இதுவரை ரூ.2 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மருந்துகள் மட்டும் ரூ.25 லட்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவுடன் மத்திய அரசு சார்பில் தேவையான உதவியும், ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண உதவி கேட்டுள்ளனர். இதில் ரூ.200 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு முழு மனதாக நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சிலர் மத்திய அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் முனைப்பில் உள்ளனர். அனைவரும் களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும். அதை விட்டு, விட்டு விமர்சனம் செய்யக்கூடாது. தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது. இரு மாநில ஒப்புதல் இருந்தால் தான் அங்கு அணை கட்ட முடியும். மு.க.ஸ்டாலின் கூட்டி இருப்பது அனைத்து கட்சி கூட்டம் என்று எப்படி சொல்ல முடியும்?. அவர்கள் கூட்டணி கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளனர். ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியில் உள்ளனர் என்பதை கூட மு.க.ஸ்டாலினால் துணிச்சலாக கூற முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story