பெரம்பலூர், அரியலூரில் பலத்த மழை


பெரம்பலூர், அரியலூரில் பலத்த மழை
x
தினத்தந்தி 29 Nov 2018 10:45 PM GMT (Updated: 29 Nov 2018 7:18 PM GMT)

பெரம்பலூர், அரியலூரில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்,

‘கஜா‘ புயல் கரையை கடந்ததை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூரில் நேற்று அதிகாலை திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை வரை விட்டு, விட்டு பெய்தது. பலத்த மழையாக பெய்யாமல் அவ்வப்போது சடசடவென மழையுடன் ஆரம்பித்து, சில நிமிடங்களில் நின்று போவதும், பின் மழை தூறிக்கொண்டும் இருந்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்றவர்கள் மிகுந்த சிரமத்துடன் குடை பிடித்தபடி அவசர அவசரமாக நடந்து சென்றதை காணமுடிந்தது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மழை கோர்ட் அணிந்தபடியும், குடை பிடித்தவாறும் சென்றனர்.

மழையில் நனைந்தபடியே

பகல் நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழந்து பகல் பொழுது இரவு போலவே இருள் சூழ்ந்து காணப்பட்டதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர். நேற்று பெய்த மழையால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்புகள் உள்ளதால், அதில் தேங்கியிருந்த கழிவுநீர் மழை பெய்யும் போது மழைநீருடன் சாலைகளில் ஓடியது. இதனால் தூர்நாற்றம் வீசியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கின. மாலை நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவ- மாணவிகள் நனைந்தபடியே சென்றனர். இதேபோல் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் மாலை வரை மழை பெய்துகொண்டிருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் சிலர் வெளியே செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூரில் நேற்று அதிகாலை 4 மணி முதல் மாலை வரை விட்டு, விட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. வி.கைகாட்டி, தாமரைக்குளம், திருமானூர், தா.பழூர், மின்சுருட்டி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளைம், செந்துறை, விக்கிரமங்கலம், கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது.

Next Story