கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:45 PM GMT (Updated: 29 Nov 2018 7:29 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

அரியலூர்,

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், தார்ப்பாய், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக பள்ளிகளிலும், மாணவ- மாணவிகளிடமும் இருந்து சேகரிக்கப்பட்டது. அந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த நிவாரண பொருட்களை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு வினியோகிக்க லாரி மூலம் அனுப்பப்பட்டன. முன்னதாக நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியை கொட்டும் மழையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி குடை பிடித்தவாறு கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (உடையார்பாளையம்), செல்வராசு (அரியலூர்), வெற்றிச்செல்வி (செந்துறை), முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பொய்யாமொழி மற்றும் செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் நேற்று கட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரண பொருட்கள் அடங்கிய சரக்கு வாகனத்தை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் வழியனுப்பி வைத்தார். இதில் துணை செயலாளர் லதா, அவைத்தலைவர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர செயலாளர் முருகேசன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

மங்களமேடு அருகே உள்ள லெப்பைக்குடிக்காட்டில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து பொருட்களும் சரக்குவேனில் ஏற்றப்பட்டு வழியனுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜஹாங்கீர், மாவட்ட பொருளாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாஹுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story