நாகையில், கணினி மையத்தில் திடீர் தீ விபத்து ரூ.7¼ லட்சம், கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசம்


நாகையில், கணினி மையத்தில் திடீர் தீ விபத்து ரூ.7¼ லட்சம், கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 29 Nov 2018 11:00 PM GMT (Updated: 29 Nov 2018 8:30 PM GMT)

நாகை கணினி மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.7¼ லட்சம் மற்றும் 4 கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் பெருமாள் தெற்கு வீதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 32). இவர் நீலா தெற்கு வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கணினி மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் கணினி மையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் இந்த கணினி மையம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

ஆனாலும் தீ விபத்தில் கணினி மையத்தில் இருந்த 4 கம்ப்யூட்டர்கள், 1 மடிக் கணினி உள்பட பல்வேறு பொருட்கள் மற்றும் லாக்கரில் இருந்த ரூ.7¼ லட்சம் ஆகியவை எரிந்து நாசமாகின. இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story