திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 103 மி.மீ பதிவு


திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 103 மி.மீ பதிவு
x
தினத்தந்தி 30 Nov 2018 4:15 AM IST (Updated: 30 Nov 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 103 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திருவாரூர்,

வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது.

நேற்று காலை மழை விட்டிருந்தது. பின்னர் மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது. நேற்று மதியம் திருவாரூர், நன்னிலம், கச்சனம், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் புயலுக்கு பின்னர் நகர பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கிராம பகுதிகள் புயல் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. பல கிராமங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை.

‘கஜா’ புயலில் விழுந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பம் நடுதல், மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழை பெய்ததால் நேற்று நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டன. மின் ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

மழை காரணமாக திருவாரூரில் பஸ் நிலையம், தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

திருவாரூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மழை தொடர்ந்து பெய்து வருவதால் கமலாலய குளம் நிரம்பி உள்ளது. அதேபோல திருவாரூரை சுற்றி உள்ள பல்வேறு குளங்களும் நிரம்பி வருகின்றன. சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் வயல்களில் இருந்து வடிகால்கள் வழியாக தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 103 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவுகளில் வருமாறு:-

வலங்கைமான்-25, பாண்டவையாறு தலைப்பு-24, மன்னார்குடி-20, திருவாரூர்-21, நன்னிலம்-21, குடவாசல்-15, முத்துப்பேட்டை-15. மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 262 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

Next Story