பழனியில்: மின்சாரம் பாய்ந்து ஆடு பலி - தொழிலாளி உயிர் தப்பினார்
பழனியில், மின்சாரம் பாய்ந்ததில் ஆடு ஒன்று பலியானது. இதில் தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பழனி,
பழனி அடிவாரம் குறும்பபட்டி வின்மணிநகரை சேர்ந்தவர் ராஜ் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டருகே கொட்டகை அமைத்து 8 ஆடுகளை வளர்த்து வருகிறார். வின்மணி நகரில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின்மோட்டார் மற்றும் அதற்கான மின் இணைப்பை வழங்கும் பெட்டியும் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று பகல் முழுவதும் மழை பெய்ததால் மோட்டாருக்கான மின் இணைப்பு வழங்கும் பெட்டி அருகே மழைநீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் நேற்று ராஜ் தனது ஆடுகளை அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டார். பின்னர் மாலையில் ராஜ், மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை, வீட்டுக்கு அழைத்து வந்துகொண்டிருந்தார்.
அப்போது, மின் இணைப்பு வழங்கும் பெட்டி அருகே தேங்கி நின்ற தண்ணீரில் 3 ஆடுகளும் கடந்து சென்றன. அப்போது அவற்றின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 ஆடுகள் வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடி உயிர் தப்பின. ஆனால் ஒரு ஆடு மட்டும் மின்சாரம் பாய்ந்ததில் அங்கேயே விழுந்து பரிதாபமாக இறந்தது.
மின்சாரம் பாய்ந்து ஆடு இறந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ், அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் உடனடியாக மின்சாரத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அவர்கள் பார்த்தபோது, மின்சார மீட்டர் வெடித்து, அதில் இருந்து வயர் அறுந்து தண்ணீரில் விழுந்துள்ளது. அதன் மூலம் மின்சாரம் பாய்ந்து ஆடு இறந்து இருப்பது தெரியவந்தது. அந்த பகுதியில் தண்ணீரில் முதலில் ஆடு சென்றதால் ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவரை காப்பாற்றி ஆடு இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story