‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு: ரூ.61¼ லட்சத்துக்கு நிவாரண பொருட்கள் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அனுப்பிவைத்தார்


‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு: ரூ.61¼ லட்சத்துக்கு நிவாரண பொருட்கள் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அனுப்பிவைத்தார்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:00 PM GMT (Updated: 30 Nov 2018 12:17 AM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.61¼ லட்சத்துக்கு நிவாரண பொருட்களை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அனுப்பிவைத்தார்.

திருப்பூர், 

நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் தாக்குதலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கஜா புயல் காரணமாக பொதுமக்கள் பலர் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட நிர்வாகம் மூலமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அம்மா அறக்கட்டளை மூலம் பெறப்பட்ட ரூ.61 லட்சத்து 28 ஆயிரத்து 389-க்கு நிவாரண பொருட்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் இருந்து 4 லாரிகளில் அனுப்பிவைத்தார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.

இதில் பொதுமக்களுக்கு தேவையான 5 கிலோ அரிசி பை, ½ கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை, தேங்காய் எண்ணெய் பாக்கெட், பனியன்கள், போர்வைகள், லுங்கிகள், சேலைகள் உள்பட பல்வேறு பொருட்கள் ஆயிரத்து 687 பெட்டிகளில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பின் சார்பாக ரூ.5 லட்சம் மதிப்பிலான மளிகைப்பொருட்களையும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அனுப்பிவைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story