வேளாண்துறையில் ரூ.25 கோடி மோசடி முயற்சி மந்திரியின் கூட்டுறவு சங்கம் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு


வேளாண்துறையில் ரூ.25 கோடி மோசடி முயற்சி மந்திரியின் கூட்டுறவு சங்கம் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 30 Nov 2018 5:55 AM IST (Updated: 30 Nov 2018 5:55 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்துறையிடம் இருந்து ரூ.25 கோடி நிதி உதவி பெற போலி ஆவணங்களை கொடுத்து மோசடி செய்ய முயன்ற மந்திரி சுபாஷ் தேஷ்முக்கின் கூட்டுறவு சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய கூட்டுறவு மற்றும் ஜவுளி மேம்பாட்டு துறை மந்திரியாக இருப்பவர் சுபாஷ் தேஷ்முக். இவர் லோக்மங்கல் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனர் ஆவார். இந்த கூட்டுறவு சங்கம் வங்கி, பால், வேளாண்மை, கல்வி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளது.

சமீபத்தில் லோக்மங்கல் கூட்டுறவு சங்கம் ரூ.25 கோடி நிதி உதவி கேட்டு மாநில வேளாண்துறையிடம் விண்ணப்பித்து இருந்தது. அந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் மந்திரியின் கூட்டுறவு சங்கம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிதி உதவிக்கு விண்ணப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வேளாண்மை மற்றும் கால்நடை, பால்வளம், மீன் வளத்துறை கூடுதல் செயலாளர் ராஜேஸ் கோவில், மந்திரியின் கட்டுப்பாட்டில் உள்ள லோக்மங்கல் கூட்டுறவு சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நிதி உதவிக்காக லோக்மங்கல் கூட்டுறவு சங்கம் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து சதார் பஜார் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இதேபோல அந்த கூட்டுறவு சங்கத்திற்கு நிதி உதவி அளிக்க வழங்கப்பட்ட ஒப்புதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story