வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணி இடைநீக்கம் கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவு
திருச்செங்கோட்டில் வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த என்ஜினீயரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). என்ஜினீயர். இவர் வரகூராம்பட்டியில் உள்ள அவரது 3 வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று அனுமதி கேட்டு உள்ளார். அதற்காக திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலமுருகன் (54) ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து என்ஜினீயர் லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மாதம் 27-ந் தேதி, லோகநாதன், அலுவலர் பாலமுருகனிடம் ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்குமார் தலைமையிலான நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த என்ஜினீயரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அவரை பணி இடைநீக்கம் செய்து நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார். அந்த உத்தரவுக்கான நகலை பாலமுருகனிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story