குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை


குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளம்வழுதி மகன் இளஞ்செழியன்(வயது 25), தொழிலாளி. இவருக்கும், பள்ளிபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமாரிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இளஞ்செழியன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது விஜயகுமாரி, தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு பள்ளிபுதுப்பட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

சம்பவத்தன்று இளஞ்செழியன், தனது மாமனார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மனைவி விஜயகுமாரியை குடும்பம் நடத்த தனது வீட்டிற்கு வரும்படி சமாதானம் செய்தார். அதற்கு விஜயகுமாரி வர மறுத்துவிட்டார்.

இதனால் மனமுடைந்த இளஞ்செழியன், அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்து மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த இளஞ்செழியனை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story