மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி கண்டக்டர் பலி- 3 வயது மகன் காயம் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி கண்டக்டர் பலி- 3 வயது மகன் காயம் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:45 AM IST (Updated: 1 Dec 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி முடிந்து மகனை அழைத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் திரும்பிய தனியார் பஸ் கண்டக்டர் டிப்பர் லாரி மோதி பலியானார். அவரது 3 வயது மகன்காயம் அடைந்தான்.

கண்ணமங்கலம், 

கண்ணமங்கலம் அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் நாகநதி கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 35), தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி தமிழரசி (27). இவர்களுக்கு ரீதீஷ் என்ற 3 வயது மகனும், யுகேஷ் என்ற 1 வயது மகனும் உள்ளனர். இதில் ரீதீஷ் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

இந்த நிலையில் நேற்று மாலை தமிழரசன், தனது மகன் ரீதீசை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். கல்பட்டு காளியம்மன் கோவில் சாலையில் அங்குள்ள வளைவில் குறுகலான இடத்தில் திரும்பியபோது எதிரே சூளைமண் ஏற்றி வந்த டிப்பர் லாரி இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ரீதீஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மிகவும் குறுகலாக உள்ள இடத்தில் வேகமாக லாரி வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என மறியல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் தமிழரசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story