மின்சாரம், குடிநீர் வழங்கக்கோரி: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


மின்சாரம், குடிநீர் வழங்கக்கோரி: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம், குடிநீர் வழங்கக்கோரி தஞ்சை அருகே மருங்குளத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர், 

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. தென்னை, பனை, புளிய மரம், அரசமரம், ஆலமரம் போன்ற மரங்கள் முறிந்தும், வேரோடும் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் தென்னை மரங்கள் மாடி வீடுகள் மீது விழுந்தும் சேதம் அடைந்தன. இது தவிர நெற்பயிர்கள், வாழை, கரும்பு, மக்காச்சோளம், வெற்றிலைக்கொடிக்கால் உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன.

புயல் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமங்களில் இன்னும் பல இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இது தவிர சாலையில் விழுந்த மரங்களின் இலைகளையும் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் புயலால் மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வினியோகிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டம் மட்டும் அல்லாது வெளி மாவட்ட பணியாளர்களும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தஞ்சை அருகே மருங்குளம் கோபால்நகரில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு 15 நாட்கள் ஆகியும் மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை, குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை எனக்கூறி அந்தப்பகுதி பொதுமக்கள் தஞ்சை-கரம்பக்குடி சாலையில் நேற்று காலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

மருங்குளம், சாமிபட்டி, காராமணிதோப்பு, அருமலை, புதுப்பட்டி, நடுவூர், ஈச்சங்கோட்டை, கோவிலூர், நெல்லுப்பட்டு, நாட்டரசன்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் வல்லம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் கிடைக்க அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் தஞ்சை-கறம்பக்குடி சாலையில் 2 மணிநேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதித்தது.

Next Story