நம்பியூர் அருகே பள்ளிக்கூட ஊழியர் திடீர் சாவு: உடலை ரகசியமாக புதைத்தாக 5 பேர் மீது போலீஸ் வழக்கு


நம்பியூர் அருகே பள்ளிக்கூட ஊழியர் திடீர் சாவு: உடலை ரகசியமாக புதைத்தாக 5 பேர் மீது போலீஸ் வழக்கு
x
தினத்தந்தி 30 Nov 2018 10:30 PM GMT (Updated: 30 Nov 2018 10:13 PM GMT)

நம்பியூர் அருகே திடீரென இறந்த பள்ளிக்கூட ஊழியரின் உடலை ரகசியமாக புதைத்தாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

நம்பியூர்,

நம்பியூர் அருகே உள்ள கெடாரையை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 59). இவருடைய மனைவி தேவகிருபை (50).

ராஜசேகரன் பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெரும் பள்ளிக்கூடத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 9–ந் தேதி ராஜசேகரன் திடீரென இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் கெடாரை அருகே உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டது.

இந்தநிலையில் ராஜசேகரன் உடல் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரியால் ரகசியமாக புதைக்கப்பட்டதாக நம்பியூர் கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுபற்றி நம்பியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராஜசேகரனின் உடலை யாருக்கு தெரியாமல் ரகசியமாக புதைத்ததாக ராஜசேகரனின் சகோதரர்கள் ராஜாமணி, செல்வக்குமார், மருமகன் பிரேம்நாத், தாய் மாமன் மோகன், சம்பந்தி சுந்தரராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மேலும் ராஜசேகரன் எப்படி இறந்தார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story