மதுரையில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பா.ஜ.க. மகளிர் அணி தலைவி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
மதுரையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பா.ஜ.க. மகளிர் அணி தலைவி கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை,
பாரதீய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாக இருப்பவர் மகாலட்சுமி (வயது 45). இவரது வீடு மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியில் உள்ளது.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவரது வீட்டின் முன்பு திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. அப்போது எதிர்வீட்டில் இருந்த காவலாளி ஓடி வந்து பார்த்த போது, மகாலட்சுமியின் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த அவரது கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்து மர்மநபர்கள் 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
சற்று நேரத்தில் அங்கு வந்த மகாலட்சுமியும், அவருடைய கணவரும் கார் தீயில் எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் காரின் முன் மற்றும் பின் பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மதுரை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் உதயகுமார், தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வந்தனர். அவர்கள் கார் அருகே கிடந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பாட்டில்கள் மற்றும் செருப்புகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தார்கள். சம்பவம் குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசி இருந்தால், அதில் பாட்டில்கள் உடைந்து அதிகமான சேதம் இருக்கும். ஆனால் மர்மநபர்கள் பாட்டிலில் பெட்ரோலை கொண்டு வந்து காரில் ஊற்றி தீ பற்ற வைத்தது போன்று உள்ளது. இருந்தாலும் காரின் அருகில் நின்று பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசி இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுகிறது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, தப்பி ஓடியவர்களை தேடிவருகிறோம்’’ என்றார்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் மகாலட்சுமி கூறும்போது, ‘‘எனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர். எனக்கு தனிப்பட்ட முன் விரோதங்கள் இல்லை. கட்சியில் நான் தற்போது பெரிய அளவில் வளர்ந்து வருகிறேன். மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறியதால் இந்த சதிச்செயல் நடைபெற்றதாக நினைக்கிறேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மிரட்டலை கண்டு நான் பயப்பட மாட்டேன். இன்னும் வேகமாக கட்சி பணியாற்றுவேன்’’ என்றார்.
தேனியில் பா.ஜ.க. நிர்வாகி கார் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், மதுரையில் மீண்டும் ஒரு சம்பவம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.