விருதுநகர் மாவட்டத்தில் கடும் நடவடிக்கை இல்லாததால் தொடரும் மணல் திருட்டு
விருதுநகர் பகுதியில் பகல் நேரங்களிலேயே லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் திருட்டு நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள குண்டாறு மற்றும் கிருதுமால் ஆற்றுப்பகுதிகளில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட நீதிபதி தாக்கல் செய்துள்ள அறிக்கை திருப்தி அளிக்க வில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் தந்த தகவல் அடிப்படையிலேயே இந்த அறிக்கை இருக்கிறது என்றும் கூறிய ஐகோர்ட்டு நீதிபதிகள், மறுஆய்வு செய்ய வக்கீல் கமிஷனரை நியமிக்க முடிவு செய்துள்ளனர். இதில் இருந்தே மாவட்ட நிர்வாகம் மணல் திருட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கருதுவதற்கு இடம் உள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் பகுதியில் ஆனைக்குட்டம் அணை மற்றும் அர்ஜுனாநதி ஆற்றுப்படுகையில் தொடர்ந்து மணல் திருட்டு நடை பெற்று வருகிறது. பகல் நேரங்களிலேயே டிப்பர் லாரிகளிலும், டிராக்டர்களிலும் மணல் அள்ளப்படுவது தொடர் கதையாகி விட்டது. அவ்வப்போது போலீசார் ரோந்து சென்றதாகவும், அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விருதுநகரை சுற்றி உள்ள நீர் நிலைகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதற்கு காரணமே, மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாதது தான் என்று கூறப்படுகிறது. ரோந்து சென்ற போலீஸ் அதிகாரிகளின் புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உடனடியாக விடுவிக்கப்படும் நிலையும் உள்ளது.
பல சந்தர்ப்பங்களில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இச்சம்பவங்கள் கொண்டு செல்லப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. நீர்நிலைகளை பாதிக்கும் மணல் திருட்டுகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் பல முறை எச்சரித்துள்ள போதிலும் நடைமுறையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இதனாலேயே மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மணல் திருட்டு பெரும் அளவில் தொடர்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு மாவட்டம் முழுவதும் அணை மற்றும் ஆற்றுப்படுகைகளில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்கவும், உரிமம் வழங்கப்பட்டவர்கள் கண்மாய்களிலும், குவாரிகளிலும் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை தடுக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மணல் திருட்டை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டு இருந்த போதிலும் அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.