வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு இசைப்பள்ளி


வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு இசைப்பள்ளி
x
தினத்தந்தி 1 Dec 2018 4:24 AM IST (Updated: 1 Dec 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சேர 7-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கு குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சியும், தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந்தவர்களுக்கு நாதசுரம், தவில் மற்றும் தேவார பிரிவுகளில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

தொடங்கிய நாள் முதல் மாவட்ட அரசு இசைப்பள்ளி எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் சில ஆண்டுகளும், பின்பு வெங்கடேசபுரத்தில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது. அதனை தொடர்ந்து தற்போது கடந்த 2 ஆண்டுகளாக விளாமுத்தூர் சாலையில் ராதாகிருஷ்ணன் நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவருகிறது.

இப்பள்ளியில் ஏறத்தாழ 40 மாணவ- மாணவிகள் நுண்கலைகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் விசாலமான வகுப்பறைகள் தேவை. ஆனால் குறுகிய இடத்தில் இசைப்பயிற்சி பெறவேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதவிர வாரவிடுமுறைகளில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியம், நடனம் மற்றும் சிலம்பம் கற்றுத்தரப்படுகிறது. கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி முகாமும் நடத்தப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் ஜவகர் சிறுவனர் மன்றம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளும், அரசு இசைப்பள்ளியில் வசதி குறைந்த குறுகிய இடத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது.

இசைப்பள்ளியில் சேரும் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதியும், மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையும், ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் அளிக்கப்படும். அரசு பஸ்களில் இலவச பயணச்சலுகை பெறலாம். பயிற்சிக்கட்டணமும் மிகக்குறைவாகும். கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு 2010 ஆண்டில் அப்போதைய கலெக்டர் விஜயகுமார் வெங்கடேசபுரத்தில் 55 சென்ட் நிலம் ஒதுக்கி தந்தார்.

ஆனால் கடந்த 8 ஆண்டுகள் ஆகியும் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் ஏதும் இதுவரை கட்டப்படவில்லை. அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள வாடகை கட்டிடத்தில் இசைப்பள்ளி இயங்குவதையும், அதில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் மேடை- நவீன அரங்கத்துடன் இசைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கும், அரசு இசைப்பள்ளி நிரந்த கட்டிடத்தில் இயங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இசைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story