நடுக்கடலில் விசைப்படகை மூழ்கடித்த சம்பவம்: இலங்கை கடற்படையினர் மீது தமிழக கடலோர போலீசார் வழக்குப்பதிவு


நடுக்கடலில் விசைப்படகை மூழ்கடித்த சம்பவம்: இலங்கை கடற்படையினர் மீது தமிழக கடலோர போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 Dec 2018 4:30 AM IST (Updated: 1 Dec 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் ராமேசுவரம் விசைப்படகு மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படையினர் மீது தமிழக கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500–க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகின் மீது, கடற்படை கப்பலைக்கொண்டு மோதி மூழ்கடித்தனர். அந்த படகில் இருந்த 4 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

இந்தநிலையில் படகின் உரிமையாளர் பத்மாவதி, அவரது கணவர் வேலாயுதம் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் இலங்கை கடற்படையினர் மீது, மண்டபம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 10–ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

சமீபத்தில் இலங்கை சிறையில் இருந்த அந்த 4 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள், இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் அந்த நாட்டுப்படகின் உரிமையாளர் கிருஷ்ணன் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூட்சன், படகின் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து, அந்த படகை விடுவித்து உத்தரவிட்டார்.


Next Story