ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை
நாமக்கல் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 80). இவர் மின்சார வாரியத்தில் போர்மேனாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் கிருஷ்ணராஜ், அவரது மனைவி தனலட்சுமியுடன் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து உள்ளார்.
பின்னர் மாலை 4 மணியளவில் வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டை திறந்து வீட்டிற்கு உள்ளே சென்று உள்ளார். அப்போது வீட்டின் குளியல் அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணராஜ் இது குறித்து நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story