தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும் ஜி.கே.மணி பேட்டி


தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 2 Dec 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் சேதம் தொடர்பாக தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

திருத்துறைப்பூண்டி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை மாவட்டங்களில் பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி நேரில் பார்வையிட்டு பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நேற்று காலை திருத்துறைப்பூண்டி வந்த அவர் மணலி, குறும்பல் ஆகிய கிராமங்களுக்கு சென்று புயலால் வீடுகளை இழந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிவாரண பொருட்களை வழங்கினார். திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 160 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்கனவே தானே, வர்தா, ஒகி புயல் தாக்கியபோது பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியில் 5 சதவீதம் மட்டுமே மத்திய அரசு வழங்கி உள்ளது. இது எந்த வகையிலும்் தமிழக அரசுக்கு பயன் அளிக்காது. தற்போது கஜா புயல் சேதம் தொடர்பாக தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதியை முழுமையாக மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

புயல் தாக்கி 15 நாட்களாகியும் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் கிடைக்காமல், குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால் குடிசைகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசு உடனடியாக ராணுவத்தை அனுப்பி போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்.

வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டித்தர வேண்டும். சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்காக சேலத்தில் இருந்து சென்னை வரை ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள தென்னை மரங்களுக்கு இழப்பீடாக மரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து விட்டு கஜா புயலில் தென்னை மரங்களை இழந்தவர்களுக்கு ரூ.1100 நிவாரண தொகை அறிவித்து இருப்பது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் முதல்-அமைச்சர் நடந்து கொள்வதாக தெரிகிறது.

எனவே சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு கூடுதல் நிவாரண தொகை வழங்க வேண்டும். இதேபோல் புயலால் சேதம் அடைந்த வாழை, பலா, மா, கரும்பு பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கும்போது வேளாண் பல்கலைக்கழகம் நிர்ணயித்த தொகையை நிவாரண தொகையாக வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர், கிராமங்களின் உட்புறங்களில் சென்று ஆய்வு செய்யாமல் மேலோட்டமாக பார்வையிட்டு சென்று விட்டதாகவும் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றும், ஒரு சில இடங்களை மட்டும் பார்த்ததால்் எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது என்பதை அவர்களால் எப்படி மத்திய அரசிடம் கூற முடியும் எனவும் பொதுமக்கள் என்னிடம் குற்றம் சாட்டினர்.

புயல் பாதித்த பகுதிகளில் இன்னும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறாமலேயே உள்ளது. எனவே மாநில அரசு கூடுதல் பணியாளர்களை நியமித்து முறையாகவும், விரைவாகவும் கணக்கெடுப்பு பணியை நடத்த வேண்டும்.

நிவாரண பணிகளில் அரசு ஊழியர்கள் நல்ல முறையில் பணியாற்றுகின்றனர். ஆனாலும் குறைவான அளவில் பணியாளர்கள் உள்ளதால் நிவாரண பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் நிவாரண பணிகள் விரைவில் நிறைவு பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில துணைத்தலைவர் சுப்பிரமணி அய்யர், துணை பொதுச்செயலாளர் பாலு, மாவட்ட நிர்வாகிகள் பாலு, சுப.சேகர், நகர செயலாளர் கல்விப்பிரியன் நீதிராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story