காஞ்சீபுரம் அருகே லாரி ஏற்றி தொழிலாளி கொலை டிரைவர் கைது


காஞ்சீபுரம் அருகே லாரி ஏற்றி தொழிலாளி கொலை டிரைவர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2018 4:00 AM IST (Updated: 2 Dec 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே லாரியை ஏற்றி தொழிலாளியை கொலை செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த துலுக்கந்தண்டலம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கங்கன் (வயது 55). இவர் வெளிமாநில லாரிகளுக்கு வழிசொல்லும் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்த புதிய மோட்டார்சைக்கிள்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி காஞ்சீபுரம் வெள்ளைகேட் என்ற இடத்திற்கு வந்தது. சாலை ஓரம் இருந்த கடைக்காரரிடம் லாரி டிரைவர் வழி கேட்டார். கடையில் இருந்தவர்கள், லாரிகளுக்கு வழிகாட்டும் தொழிலாளிகள் உள்ளனர் என்று கூறி தொழிலாளி கங்கனை அழைத்தனர்.

லாரி டிரைவர், வழி காட்டும் தொழிலாளி கங்கனிடம் முதலில் மோட்டார் சைக்கிள்களை திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரில் இறக்க வேண்டும். அதன்பின்னர் மோட்டார் சைக்கிள்களை காஞ்சீபுரத்தில் இறக்க வேண்டும். அதற்கான வழி சொல்ல வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு கங்கன் கூலியாக ரூ.600 தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கங்கன் அந்த லாரியில் ஏறி மணவாளநகர் இடத்தை காண்பித்துள்ளார். மோட்டார் சைக்கிள்களை இறக்கிவிட்டு, மீண்டும் காஞ்சீபுரம் வழியாக வெள்ளைக்கேட் என்ற இடத்திற்கு வந்தனர். அப்போது வடமாநில டிரைவர், கங்கனிடம் பேசிய தொகையான ரூ.600 கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி லாரி டிரைவர், கங்கனை கீழே தள்ளி லாரியை எடுத்து அவர் மீது ஏற்றினார். தொடையில் லாரி ஏறி இறங்கியதில் கங்கன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியம், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் கங்கன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கீழம்பி ஜங்சன் என்ற இடத்தில், லாரியை சாலை ஓரமாக விட்டுவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரை போலீசார் பாலுச்செட்டிசத்திரத்தில் உள்ள ஒரு ஓட்டல் அருகே மடக்கி பிடித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலம், பைசாலி மாவட்டம், அஜிப்பூர் தாலுகா பல்லன் கிராமத்தை சேர்ந்த தரஞ்சித் சஹானி (36) என்பது தெரியவந்தது. கங்கனை லாரி ஏற்றி கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட, கங்கனுக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், ராஜேஷ் என்ற ஒரு மகனும், ரேவதி, பவளராணி என்ற 2 மகள்களும் உள்ளனர். கைது செய்யப்பட்ட தரஞ்சித் சஹானி யை காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

Next Story