கஜா புயலால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்


கஜா புயலால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:00 AM IST (Updated: 2 Dec 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. 12-வது மாநாடு தஞ்சையில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சேவையா, துணைத்தலைவர் சாமிக்கண்ணு ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயலாளர் அருணாசலம், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில செயலாளர் அருணாசலம் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமரன் வரவேற்றார்.

மாநாட்டை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தில்லைவனம், பொருளாளர் கோவிந்தராஜன் அறிக்கை வாசித்தனர். மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் தீர்மானங்களை வாசித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் ரவி கலந்து கொண்டு பேசினார்.

தீர்மானங்கள்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கஜா புயலால் சேதமடைந்த கூரை வீடுகள், ஓட்டு வீடுகளுக்கு பதிலாக அரசு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். சேதமடைந்த படகுகள், வலைகள், வாழை, மா, முந்திரி, சவுக்கு, தேக்கு, உள்ளிட்டவற்றுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கு, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்வரை வேலையில்லா கால நிவாரணமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

கூடுதல் பணியாளர்கள்

புயல் நிவாரண பணிகளில் மின்வாரிய, சுகாதார, வருவாய்த்துறை, தொலைத்தொடர்பு ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணி செய்து வருவது பாராட்டுக்குரியது. மேலும் கூடுதல் பணியாளர்களை உடனடியாக நியமித்து பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் உடன் வழங்க வேண்டும். கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் வருவாய்த்துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், தமிழ்நாடு மின் தொழிலாளர் சம்மேளன திட்ட செயலாளர் பொன்.தங்கவேலு, அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் தியாகராஜன் நன்றி கூறினார்.

Next Story