பிச்சை எடுத்த குழந்தைகளை பிடித்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் ‘திடீர்’ போராட்டம்


பிச்சை எடுத்த குழந்தைகளை பிடித்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் ‘திடீர்’ போராட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 2 Dec 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் பிச்சை எடுத்த குழந்தைகளை போலீசார் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்களின் சீசன் நடந்து வருகிறது. இதையொட்டி ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், நரிக்குறவர்கள் ஊசி, பாசி மாலை போன்றவைகளை விற்பனை செய்து வருகிறார்கள். நரிக்குறவர்களின் குழந்தைகள் பலர் வீதி வீதியாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா தலைமையிலான அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் கன்னியாகுமரி பகுதியில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் பிச்சை எடுத்த 14 வயது சிறுவன், 12 வயது சிறுமி போலீசார் உதவியுடன் அதிகாரிகள் மீட்டனர். அவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பதற்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

இந்த தகவல் ஆங்காங்கே ஊசி, பாசி விற்றுக்கொண்டிருந்த நரிக்குறவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் குழந்தைகளை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை வழிமறித்து சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகளும், போலீசாரும் சமாதானம் செய்தனர். உங்கள் குழந்தைகளை பிடித்து செல்லவில்லை, பள்ளியில் சேர்ப்பதற்காகத் தான் அழைத்து செல்கிறோம் என கூறினர். அதை ஏற்று நரிக்குறவர்கள் வழிவிட்டனர். மீட்கப்பட்ட 2 குழந்தைகளும் நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

Next Story