சிற்றார் ரப்பர் தோட்டத்தில் காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்


சிற்றார் ரப்பர் தோட்டத்தில் காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 2 Dec 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

அருமனை அருகே சிற்றாரில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பால்வெட்ட சென்ற பெண் காட்டெருமை தாக்கி படுகாயம் அடைந்தார்.

அருமனை,

குமரி மாவட்டத்தில் சிற்றார், கீரிப்பாறை, மருதம்பாறை போன்ற பகுதிகளில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் பால் வெட்டுதல், பால் வடித்தல் போன்ற பணிகளில் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பால்வெட்டும் தொழிலில் ஈடுபடும் போது, காட்டு விலங்குகளால் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சிற்றாரில் பெண் தொழிலாளி ஒருவர் காட்டெருமை தாக்கி படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

அருமனை அருகே சிற்றார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சந்திரி (வயது 41), ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று அதிகாலையில் சிற்றாரில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பால் வெட்ட சென்றார். அவருடன் வேறு சில தொழிலாளர்களும் சென்றனர்.

சந்திரி பால்வெட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் ஒரு காட்டெருமை வேகமாக பாய்ந்து வந்தது. அந்த பகுதி இருட்டாக இருந்ததால் அவர் காட்டெருமையை கவனிக்க வில்லை. திடீரென அது சந்திரியை தாக்கி தூக்கி வீசியது. படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு பக்கத்தில் நின்ற சக தொழிலாளர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் காட்டெருமையை துரத்தி விட்டு, சந்திரியை மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story